Friday, September 18, 2009

Vijay voice-NO idea On Politics


நடிகர் விஜய் நேரடியாக அரசியலில் ஈடுபடும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்றும், மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் ரஜினிக்கு பிறகு அரசியல் பிரவேச சர்ச்சையில் அதிக நாட்கள் சிக்கியவர் நடிகர் விஜய். கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுலை விஜய் சந்தித்து பேசியதன் மூலம் பரபரப்பு மேலும் அதிகரித்தது. இந்நிலையில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல், விஜய் காங்கிரஸில் சேர்ந்தால் வரவேற்போம் என்று அழைப்பு விடுத்தார். இதனால் விஜய்யின் அரசியல் பிரவேசம் உறுதி என செய்திகள் வெளியாயின.

தன்னைச் சுற்றி வரும் இந்த அரசியல் பிரவேச சர்ச்சைக்கு இன்று விஜய் முற்றுப்புள்ளி வைத்தார். சென்னையில் இன்று நிருபர்கள‌ை சந்தித்த விஜய், இப்போதைக்கு அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை. எனது பெயரில் இருக்கும் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சியின் பார்வை இப்போது இளைஞர்கள் பக்கம் இருக்கிறது. என்னுடைய பார்வையும் இளைஞர்கள் பக்கம்தான் இருக்கிறது. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஆதரவாக இருப்பேன், என்று தெரிவித்தார்.

விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சொல்லி வரும் நிலையில், விஜய் அரசியிலில் ஈடுபடும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று அறிவித்திருக்கிறார். விஜய்யின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிறந்த நாளின்போது விஜய், ரசிகர் மன்ற கொடியை அறிமுகப்படுத்தினார். மக்களுக்கு உதவும் இயக்கமாக தனது ரசிகர்கள் ஓருங்கிணைய வேண்டும் என்றும் ரசிகர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆண்டு பிறந்த நாளில் ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் கம்ப்யூட்டர் மையங்களை திறந்தார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் விஜய் நற்பணி இயக்கம் சார்பில் இலவச கம்ப்யூட்டர் மையம் திறக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment

Kollywood Updates © 2008 Template by:
Kollywood updates